
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் மீண்டும் மருத்துவர் விபிபி பரமசிவம் களமிறங்கி இருக்கிறார். திமுக சார்பில் டி சாமிநாதன் போட்டியிடும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். இவர்களுக்கு மத்தியில் த.வெ.க. சார்பாக களமிறங்கி இருக்கிறார் டாக்டர் என்.நாகஜோதி. கால்நடை மருத்துவப் படிப்பில் முதுநிலைப் பட்டம்பெற்றவரான இவர் அரசுப் பணியில் இருந்த அனுபவம் கொண்டவர். புதுமுக வேட்பாளரான நாகஜோதியிடம் ஒரு பேட்டி:
அரசியலுக்கு நீங்கள் புதுமுகம். எப்படி தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடைத்தது?
சிறுவயதில் இருந்தே எனக்கு அரசியலில் நல்ல ஆர்வம் உண்டு. அதைக் கூர்ந்து கவனித்துவருகிறேன். மக்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பணிக்குச் செல்லவேண்டும் என்ற விருப்பமும் உண்டு. விஜய் ரசிகை என்ற முறையில் அவர் கட்சி ஆரம்பித்ததும் ஊழலற்ற நல்லாட்சி நடத்துவோம் என அவர் சொன்னதும் என்னைக் கவர்ந்தது. எனவே அக்கட்சியில் இணைந்து போட்டியிட வாய்ப்புக் கேட்டேன்.என் கல்வித் தகுதியையும் ஆர்வத்தையும் பார்த்து சொந்த ஊரிலேயே போட்டியிட வாய்ப்பு வழங்கி இருக்கிறார் தளபதி. தொகுதியில் நான் பிறந்த ஊர் வடமதுரை நந்தவனம்பட்டி. அங்கே எங்கள் குடும்பம் தாத்தா காலத்தில் இருந்தே பொதுவாழ்க்கையில் ஈடுபட்டதால் நன்கு அறியபட்டவர்கள். அந்த அறிமுகமும் எனக்கு உதவிகரமாக இருக்கும்.
பலம்வாய்ந்த கட்சிகளான திமுக, அதிமுக ஆகிய இருகட்சிகளுக்கு இடையே வேடசந்தூரில் நேரடிப் போட்டி. இவர்களை எதிர்த்துப் போட்டியிட எதை நம்பி இருக்கிறீர்கள்?
எங்கள் தலைவர் விஜய் அவர்கள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை ஒன்றை நம்பிதான் களமிறங்கி இருக்கிறேன். கடைக்கோடி மக்களையும் சென்றடையகூடிய திட்டங்களை தேர்தல் வாக்குறுதியாக எங்கள் தலைவர் அறிவித்திருக்கிறார். படித்த இளைஞர்கள் வாழ்வாதாரம் உறுதிப்படும் வரை அவர்களுக்கு மாதந்தோறும் 4000 ரூ உதவித்தொகை, ஆறு சிலிண்டர்கள் வழங்கும் திட்டம், பெண்கள், முதியோருக்கு ஊக்கத்தொகை, கல்வி ஊக்கத்தொகை, இலவச மருத்துவம் போன்ற வாக்குறுதிகள் பொதுமக்களிடம் கவனத்தைப் பெற்றுள்ளன.
இந்த தொகுதியின் முக்கிய பிரச்னைகள் என்ன? அவற்றைத் தீர்க்க என்ன வழிமுறைகள் வைத்துள்ளீர்கள்?
எங்கள் தொகுதி வறட்சியான பகுதி. நீர் பற்றாக்குறை தொடர்குறையாக இருக்கும். அதைப் போக்க தொகுதி முழுவதும் காவிரி நீர் கொண்டுவர பாடுபடுவேன். அருகே இருக்கும் மாயனூர் அணைக்கட்டு நீரைக் கொண்டுவந்தால் விவசாயத்துக்கு உதவியாக இருக்கும் என்பது இங்குள்ள மக்களின் கோரிக்கை. இவற்றை நிறைவேற்றப் பாடுபடுவேன்.
அதுமட்டுமல்ல… இங்கே நிறைய மில்கள் இருக்கின்றன. அதை நம்பிப் பல தொழிலாளர்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கான காப்பீடு, ஓய்வூதிய வசதிகளுக்காக குரல்கொடுப்பேன்.
தொகுதிக்குள் தவெக தொண்டர்கள் மத்தியில் எப்படி இருக்கிறது மனநிலை?
அவர்கள் உற்சாகமாக இருப்பதைப் பார்க்கிறேன். மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். அந்த மாற்றத்தை தளபதி தருவார் என நம்புகிறார்கள். நாங்கள் செல்லும் இடங்களில் மக்கள் தரும் வரவேற்பு அதையே காட்டுகிறது. ஊழலற்ற அரசு தலைவர் விஜய் தலைமையில் அமையும்.